Saturday, July 24, 2010

வேதாத்திரி மகரிஷி


சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் வேதாத்திரி மகரிஷி. இவரது தந்தைப் பெயர் வரதப்பன். தாயார் பெயர் சின்னம்மாள்.நெசவுத் தொழிலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர்.

சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார். கதை கேட்கும் போதே சிறுவன் வேதாத்திரி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக தாய் சின்னமாளிடம் கேட்பார். அவரது தாயாரும் சிறுவனின் கேள்விக்கு சளைக்காமல் பதில் கூறுவார்.

இத்தகைய கேள்வி ஞானமே பின்னாளில் இவரது தாரக மந்திரமாக விளங்கிய 'சொன்னால் மட்டும் நம்பாதே; சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்' உருவாவதற்கு காரணமாக விளங்கியது என்றே கூறலாம். இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்புவரை படித்தவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார்.

இந்நிலையில் வேதாத்திரி மகரிஷிக்கு அவரது 7வது வயதில் அறிமுகமானார் பாலகிருஷ்ண நாயக்கர் என்பவர். அவரது சந்திப்பும், அவருடன் இவருக்கு ஏற்பட்ட பரிச்சயமும் இவரது வாழ்க்கை பாதையை மாற்றியது என்றே கூறலாம். ஆம் பாலகிருஷ்ண நாயக்கர் கூறிய அறிவுரையினால் மகரிஷி பஜனை பாடல்கள் மேல் ஆர்வம் கொண்டு அதனை கற்றார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பது, பஜனை செய்வது என்று நாட்கள் ஓட, இவரின் 12 வது வயதில் இவருள் எழுந்த சிந்தனை, பல நூல்கள் உருவாக உதவின.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்திற்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட, உணவு பழக்கமுறைகள் சம்மந்தப்பட்ட நூல் ஒன்றை வாங்கி படிக்கும் வாய்ப்பு கிட்ட, அதில் கூறப்பட்ட கருத்துகள் இவரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் மாமிச உணவுகளை உண்பதை கைவிட்டார் மகரிஷி.

இவரின் 18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளை கற்றார் மகரிஷி.

இந்நிலையில் அவரின் 23வது வயதில் எதிர்பாராத பல சம்பவங்கள் இவர் வாழ்க்கையில் ஏற்பட்டன. தந்தை இறந்தவிட, சகோதரியின் மகள் லோகாம்பாளை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இவருக்கு குழந்தைகள் இல்லாததால், லோகாம்பாளின் சித்தி மகள் லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மகரிஷி.

அவரது 34 வயதில் சென்னையில் பரஞ்ஜோதி மகானை சந்திக்கும் வாய்ப்பு மகரிஷிக்கு ஏற்பட்டது. அதற்கு பின்பே மெய்யுணர்வு தீட்சை எடுத்துக் கொண்டார் மகரிஷி. உலக சமாதான ஆலயக் குழுச் செயலராக இருந்த வேதாத்திரி, பரஞ்ஜோதி மகானுடன் இலங்கைக்கு அடிககடி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இவரின் அலுவலகத்தில் சட்டத்துக்கு விரோதமாக மேலதிகாரி செயல்பட வலியுறுத்தியதால் தனது வேலையை ராஜினாமா செய்து தன்னுடைய லுங்கி வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

இவரின் இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இவரின் சகோதரரின் மூத்த மகளை தத்தெடுத்து கொண்டார். இதற்கிடையில் அவரின் 42வது வயதில் ஒரு பெளர்ணமி தினத்தன்று அருள்மிகு ராமலிங்க வள்ளளார் இவருக்கு அருள்காட்சி தந்தார். இந்த நிகழ்வே இவரை ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள வைத்தது எனலாம்.

கடந்த 1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிட்ட அங்கெல்லாம் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.

மகரிஷி தன்னுடைய 65வது வயதில் காயகல்ப பயிற்சி முறைகளை முறைப்படுத்தி பாடத் திட்டம் வகுத்தார். பின்னர் சென்னையிலும், ஆழியாற்றிலும் ஆசிரமங்களை நிறுவினார். காந்த தத்துவம், பிரம்மஞானத்தை விரிவாக விளக்கி புத்தகங்கள் பல எழுதினார்.

அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாற்றில் சாந்தலட்சுமி மில்ஸ் நிர்வாகி சின்னசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் 'அருட்பெரும் ஜோதிநகர்' ஒன்றை உருவாக்கினார். மேலும் 'அன்பொளி' என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.

No comments:

Post a Comment